திருச்சி வயலூர் ரோடு வாசன்வேலி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ஆசாரியா. தொழில் அதிபரான இவர், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரிடம், திருச்சி காந்தி மார்க்கெட் தையல்காரத் தெருவை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோர் அறிமுகமாகி பங்கு சந்தைகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய பிரின்ஸ் ஆசாரியா, கடந்த 2019- ம் ஆண்டு முதல் தன்னிடம் இருந்த பணம் மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த நண்பர்கள், தொழிலதிபர்கள் 18 பேரிடம் மொத்தம் ரூ. 2 கோடியே 50 லட்சத்து 8 ஆயிரத்து 500-ஐ பல்வேறு தவணைகளில் அவர்களின் வங்கி கணக்கிலும், நேரிலும் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் ரூ. 27 லட்சத்து 59 ஆயிரத்து 297 பிரின்ஸ் ஆசாரியா தரப்பினருக்கு லாபத் தொகையாக வழங்கப்பட்டது. பின்னர் கடந்த 2021 முதல் லாபத் தொகை வழங்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து பிரின்ஸ் ஆசாரியா தரப்பினர் முதலீட்டுத் தொகையை திரும்ப கேட்டபோது சரியான பதில் அளிக்கப்படவில்லை. பணத்தை திருப்பி கேட்டதற்கு பிரின்ஸ் ஆசாரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் பிரின்ஸ் ஆசாரியா புகார் செய்தார். அதில், தங்களது முதலீட்டுத் தொகை ரூ. 2 கோடியே 50 லட்சத்து 8,500 பணத்தை சுரேஷ் அவரது மனைவி சரண்யா சென்னை அசோக் நகர் அவன்யூ பகுதியைச் சேர்ந்த மாளியம்மான் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், மேற்கண்ட 3 பேர் மீதும் 420 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.