திருச்சியில் ரூ.15 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா இறுதிக் கட்டத்தை எட்டியது- விரைவில் திறப்பு விழா( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்ட மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சம் உள்ள இடம் என்று எடுத்துக் கொண்டால் முக்கொம்பு தான் நினைவுக்கு வரும். அருகிலுள்ள கல்லணை தஞ்சை மாவட்டத்தில் வருகிறது. இந்த இரு இடங்களுக்கும் மக்கள் சென்று அலுத்து போய்விட்டது. இதனால் அவர்கள் ஓய்வு நேரங்களில் டிவி மற்றும் செல்போன்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். மாலை நேரங்களில் சிலர் காவிரி பாலத்தில் நின்று பொழுதை கழிக்கிறார்கள். ஆகவே, பொதுமக்களின் நலன்கருதி
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பரசம்பேட்டை காவிரி ஆற்றின் கரையில் பிரமாண்டமாக பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்கா 163 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.13.70 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. பூங்காவில் மீன்வளம் உள்பட இன்னும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனையும் சேர்த்து திட்ட செலவு சுமார் ரூ.15.5 கோடி ஆகும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. புவியியல் நிலப்பரப்புகளை உருவாக்குதல், பறவை கூண்டு நிறுவுதல், உட்புற அலங்காரங்கள் மற்றும் சுமார் 50 பேர் அமரும் வகையில் மினி தியேட்டர் கட்டுமானம், பூங்கா, ஓட்டல், ஓய்வறைகள் மற்றும் பார்க்கிங் வசதி போன்ற பணிகள் நிறைவடைந்து உள்ளன.
இந்த பறவைகள் பூங்காவில் பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட சூழலில் வைக்கப் பட்டுள்ளன. இந்த பூங்காவை ஒரே நேரத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பார்வையிடலாம். அறிவியல் ஆவணப்படங்களை திரையிட 7டி திரையரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. 60 கார் களும், 100 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க காலத்திலிருந்து தமிழ் இலக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களை மையமாக கொண்டு மலைகளையும், காடுகளையும், நிலங்களையும், கடற்கரைகளையும், பாலைவனங்களை யும், செயற்கை நீர்வீழ்ச்சிகளையும், குளங்களையும், கலங்கரை விளக்கங்களையும் உள்ளடக்கிய குறிஞ்சி. முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற புவியியல் கருப்பொருள்களில் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பூங்கா அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இந்த பூங்கா விரைவில் திறப்புவிழா காண உள்ளது.
Comments are closed.