ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் . இவர் மீது கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விஜயபாஸ்கர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விஜயபாஸ்கரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தார். கடைசியாக கேரளாவில் தலை மறைவாக இருந்தபோது அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நில மோசடி வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சேகரை இன்று(02-09-2024) சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.