Rock Fort Times
Online News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர்…!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த கொலை தொடர்பாக ஆயுள் தண்டனை கைதியும், பிரபல ரவுடியுமான நாகேந்திரன் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரவுடி நாகேந்திரன் தவிர  25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பின்னர் தலைமறைவாக இருந்து வரும் ரவுடிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த சென்னை அசோக் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்தனர். அதேபோல, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்