திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொணலை ஊராட்சியில் உள்ள கல்பாளையம் பகுதி சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி விமலாராணி. இவர் பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விமலாராணி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19ந் தேதி பணியை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கல்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் முகவரி கேட்பது போன்று ஆசிரியை கையில் அரிவாளால் வெட்டிவிட்டு கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விமலாராணியை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கு ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில் வழிப்பறி செய்தது திருநெல்வேலி மாவட்டம் மகா தேவகுளம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்கிற கார்த்திக் (வயது30 ) என தெரிய வந்தது .இதனையடுத்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தலைமறைவாக இருந்த கார்த்திக்கை சிறுகனூர் போலீசார் கைது செய்தனர்.மேலும் மற்றொரு நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
