Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சாலைகள் புதுப்பித்தல் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்…* அனைத்து வியாபார சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (20-08-2025) வலிமா மினி ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர்கள் யு.எஸ்.கருப்பையா, ஜி.பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆலோசகர்கள் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம், ஏ.தங்கராஜ், எஸ்.பி.பாபு, ஒருங்கிணைப்பாளர்கள் வி.என்.கண்ணதாசன், எஸ்.எம்.டி.ஷபி முஹம்மது மற்றும் துணைத்தலைவர்கள், துணைச் செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழக சட்டமன்றத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இரண்டு, மூன்று முறை காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி பேசினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட மாட்டாது, 50 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து இங்கேயே செயல்படும் என்று உறுதிமொழி அளித்தார். ஆனால் மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதால் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். அவரது இந்த பேச்சுக்கு அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மூலம் ஆண்டுக்கு வரி மூலமும், வாடகை மூலமும் பலகோடி ரூபாய் அரசுக்கும், மாநகராட்சிக்கும் வருவாயாக கிடைக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும். ஆடி மாதம் முடிந்து மறுநாளே சுமார் 3 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் காந்தி மார்க்கெட் முழுவதும் சாலைகள் புதுப்பித்தல், சாக்கடைகள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகவே, இன்னும் இரண்டு நாட்களில் இப் பணிகளை தொடங்கி மூன்று மாதத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில்,சங்கத்தின் செயலாளர் என்.டி.கந்தன் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்