இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி, மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் டி.ராஜா கூறுகையில், இந்திய நாடு மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாக திகழ வேண்டும் என்பது தான் அரசியலைப்பு உருவாக்கிய போது இருந்தது. ஆனால், இன்று பா.ஜ.க மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு என்கிற அடிப்படையை தகர்த்து வருகிறது. எதிரணி தலைவர்களை அச்சுறுத்த பா.ஜ.க அமலாக்கத்துறை, வருமானவரி துறையை ஏவி வருகிறது. பா.ஜ.க வின் வலதுசாரி கொள்கையை வீழ்த்த வேண்டும். எல்லா மாநிலங்களிலும் அரசியல் சூழல் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தமிழ்நாட்டில் நிலை வேறு, மேற்கு வங்கத்தில் நிலை வேறு, கேரளாவின் நிலை வேறாக இருக்கிறது. இந்தியா கூட்டணியில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவை பேசி தீர்க்க கூடியவை தான். இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் தேசத்தை காப்பாற்ற பா.ஜ.க வை வீழ்த்த வேண்டும் என்கிற புரிதல் இருக்கிறது. அதன் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வாக்கு எண்ணிக்கையின் போது வி.வி.பேட்டையும் எண்ண வேண்டும். கார்ப்பரேட்டுகளிடம் அதிக நிதியை திரட்டிய கட்சி பா.ஜ.க தான். ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது சாத்தியமற்ற ஒன்று. இது பா.ஜ.க வின் வலதுசாரி சிந்தணையிலிருந்து வருவது. ஆளுநர் என்கிற பதவியை ஒழிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. மோடி ஆட்சியில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. அதற்கு கருவிகளாக ஆளுநர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மார்க்ஸ், திருவள்ளுவர் குறித்து அபத்தமாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது காந்தி குறித்து பேசி இருக்கிறார். அவர், ஆளுநர் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர் அந்த பொறுப்பிலிருந்து விலகி என்ன வேண்டுமானாலும் பேசட்டும் அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்தித்துக் கொள்வோம் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.