Rock Fort Times
Online News

வெயில் அதிகரிப்பு: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி போகுமா? – * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

மே தினத்தை முன்னிட்டு, திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உழைத்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மே தின வாழ்த்துக்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு பொதுவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீஹார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இது வெற்று அறிவிப்பாக இருந்து விடக்கூடாது. அதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தமிழக முதல்வர் தயாராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருகிறது.ஆகவே பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி போகுமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவித்துள்ளோம். கோடை வெயிலின் தன்மை அடிப்படையில் முதல்வர் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறக்கப்படும். தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் குறித்த கேள்விக்கு, கடந்த 2009 ஆம் ஆண்டு நீதியரசர் தலைமையில் பள்ளி கட்டணம் நிர்ணயம் செய்யும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்