Rock Fort Times
Online News

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம்..!

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட மனித வள மேம்பாட்டுத்துறை யின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கத்தை நியமித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். நீதி சாராத 2 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனின் தலைவர் வி.ராமராஜ் (நாமக்கல்) மற்றும் வருமான வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் 17.4.2027 வரை இந்த பதவி வகிப்பார் என்றும், மற்ற 2 உறுப்பினர்கள் தங்கள் 70 வயது வரையிலோ அல்லது 5 ஆண்டுகள் வரையிலோ, இதில் எது முதலில் வருகிறதோ? அதுவரையில் பதவியில் நீடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ராஜமாணிக்கம் 31.5.1959-ம் ஆண்டு பிறந்தவர். 1983-ம் ஆண்டு வக்கீலாக பணியை தொடங்கி மாவட்ட முனிசீப்பாக நீதிமன்றத்தில் பதவி பெற்றார். அதன்பின்னர் மாவட்ட நீதிபதி, மாவட்ட தலைமை நீதிபதி என படிப்படியாக வெற்றியின் படியை தொட்டார். 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு பதிவாளராக பதவியேற்ற அவர் அடுத்த ஆண்டில் (2017) சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனார். 30.5.2021 அன்று நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதி பிரிவு உறுப்பினராக 18.4.2022 முதல 19.8.2024 வரை பணியாற்றினார். இந்த வெற்றியின் வரிசையில் இன்று லோக் ஆயுக்தாவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்