தமிழகத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து வி.கே பாண்டியன் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஆனால் ‘வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மறுத்து விட்டார். இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன். ஐ.ஏ.எஸ்., பதவியை துறந்து பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை.
மூதாதையர்களின் சொத்துகள் தான் என் வசம் உள்ளன. நான் ஐ.ஏ.எஸ்., பணியில் சேரும்போது இருந்த சொத்துக்களே இப்போதும் என்னிடம் உள்ளன. மக்களுக்கு சேவையாற்றவே ஐ.ஏ.எஸ். பணிக்கு வந்தேன். அதன் மூலம் ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. இதில், சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 தொகுதிகளில் பாஜக வென்று 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்தை தோற்கடித்தது. பிஜூ ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.