ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7ஆம் நாள் – ஆண்டாள் முத்துக்கொண்டை அணிந்து, வைரக்கல் அபயஹஸ்தம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி நம்பெருமாள் சேவை சாதித்தார். 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதும், பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழா கடந்த 19ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் திருவாய்மொழி எனப்படும் பகல்பத்து உற்சவத்தின் 7ஆம் திருநாளான இன்றைய தினம் காலை, நம்பெருமாள் ஆண்டாள் முத்துக்கொண்டை அணிந்து, வைரக்கல் அபயஹஸ்தம், மார்பில் மகரகர்ணப் பதக்கங்களுடன் மகாலட்சுமி பதக்கம், மகரகண்டிகைகள், பவழமாலை, முத்துமாலை, வெள்ளைப் பக்க்ஷி பதக்கம், புஜகீர்த்தி உள்ளிட்ட திருவாபரணங்களை அணிந்து சேவை சாதித்தார். மூலஸ்தானத்தில் இருந்து தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாளைத் தொடர்ந்து, ராமானுஜர், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் எழுந்தருளினர். அரையர்கள் பாசுரங்களை இசைத்தவாறு பிரகாரங்களில் வலம் வந்து, பின்னர் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். பன்னிரு ஆழ்வார்கள் முன்னிலையில் நம்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு பொதுஜன சேவை கண்டருளினார். வரிசையில் நின்று காத்திருந்த பெருந்திரளான பக்தர்கள் “ரெங்கா… ரெங்கா…” என பக்திக் கோஷமிட்டவாறு நம்பெருமாளை சேவித்து மகிழ்ந்தனர்.

Comments are closed.