திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் வருகிற ஏப்ரல் மூன்றாம் தேதி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலை சுற்றியுள்ள தேரடி வீதி, மற்றும் நந்தி கோயில் தெரு, என்.எஸ்.பி.ரோடு பகுதிகளில் வருடம் தோறும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவை முன்னிட்டு கோவில் தேரடி வீதி, என்.எஸ்.பி ரோடு,நந்தி கோவில் தெரு பகுதியில் உள்ள தரைக்கடைகள் மற்றும் சாலையோர கடைகளை கோட்டை போலீசார் இன்று அகற்றினார்கள்.தெப்பக்குளத்தை சுற்றியுள்ள அனைத்து தரைக்கடை மற்றும் சாலையோர கடைகள் உடனடியாக அகற்றப்பட்டன. இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் கடைகளை அவர்களாகவே அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

