திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு( வீடியோ இணைப்பு)
திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இங்குள்ள சில கடைகளின் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஜங்ஷன் வழியாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பேர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், பேருந்துகள் என அதிகளவு சென்று வருகின்றன. இங்குள்ள ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தாலும் மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. இந்தநிலையில் இன்று(20-02-2025) மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான திருச்சி-மதுரை ரோடு ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி எந்திரத்துடன் வந்தனர். பின்னர், மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில், கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் நடராஜன் ஆகியோர் மேற்பார்வையில், ஊழியர்கள் ஜங்ஷன் பகுதியில் 30 கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர்.
திருச்சி மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அக்கட்சியின் நிர்வாகிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என தெரிவித்தனர். இதனால் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு அருகில் உள்ள மற்ற கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
Comments are closed.