110 நாட்களுக்கு முன்பே வெளியீடு: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு…!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலக்கூடிய 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2026ம் ஆண்டு வரக்கூடிய பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.17ம் தேதி தேர்வுகள் தொடங்கப்படுகின்றன. இதில் 10ம் வகுப்புக்கு மார்ச் 10ம் தேதியன்றும், 12ம் வகுப்புக்கு ஏப்ரல் 9ம் தேதியன்றும் தேர்வுகள் நிறைவடைகின்றன. இதுதொடர்பான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் முதன்முதலாக இந்த முறை தேர்வுகள் தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு, ஒவ்வொரு பாடத்தேர்வுகளுக்கும் இடையே தயார் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு தேதிகளை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை முடிக்கும் நாள் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளிலும் சிறப்பாக பங்கேற்க முடியும். ஒரே நாளில் இரண்டு பாடங்களுக்கான தேர்வுகள் வராமல் இருக்கும் வகையில் தேர்வு தேதிகள் முறையாக திட்டமிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் 10ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 22 லட்சம் பேரும், 12ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15 லட்சம் பேரும் தேர்ச்சியடைந்து வெளியில் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Comments are closed.