Rock Fort Times
Online News

திருச்சி, சிறுகனூரில் உள்ள எம்ஏஎம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு- பிரேத பரிசோதனை செய்யவிடாமல் முற்றுகையிட்டதால் பரபரப்பு…!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் அழகுமணி கண்டன் (20). இவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள எம்ஏஎம் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ.3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அழகுமணிகண்டனுக்கும், அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஒரே கல்லூரியில் இருவரும் படித்ததால் அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டனர். நேரில் சந்திக்க முடியாத நாட்களில், இருவரும் செல்போன் மூலமும் பேசி தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அழகு மணிகண்டன் போன் செய்தால் அந்த மாணவி, போனை எடுக்காமல் தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மாணவியை நேரில் சந்தித்த அழகு மணிகண்டன் தனது செல்போன் அழைப்பை தவிர்த்தது குறித்து கேட்டுள்ளார்.

அப்போது, அந்த மாணவி இந்த நிமிடத்தில் இருந்து நம் காதல் முறிந்து விட்டது என்று கூறியதாக தெரிகிறது. இதனால், அழகு மணிகண்டன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.இந்த நிலையில் அவர் திடீரென்று கல்லூரி யின் 3-வது மாடியில் இருந்து குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அழகுமணிகண்டனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகுமணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அழகு மணிகண்டன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் ஒரு தலை பட்சமாக நடப்பதாகவும் குற்றம் சாட்டிய உறவினர்கள் அழகு மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று பிரேத பரிசோதனை கூடத்தை முற்றுகையிட்டனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்