Rock Fort Times
Online News

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை பல்லிகள், குள்ளநரி குட்டி – வசமாக சிக்கிய பயணி…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த உடைமைகளில் இருந்த கூடையில் ஏதோ உயிரினம் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் கூடையை திறந்து பாா்த்தபோது அதில் இருந்த பிளாஸ்டிக் டப்பாக்களில் அரிய வகை உயிரினங்கள் இருப்பது தெரிய வந்தது. அதில் தென் ஆப்பிரிக்கா, வட அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள வனப்பகுதியில் வாழும் அபூர்வ வகையை சேர்ந்த 4 சிறிய தேகு வகை பல்லிகள், வடஅமெரிக்கா பகுதிகளில் வசிக்கும் அரிய குள்ளநரி வகையை சேர்ந்த ரக்கூன் குட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது  குறித்து அந்த பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை என்பதால் அவற்றை வீட்டில் வளர்க்க எடுத்து வந்ததாக கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து அவற்றுக்கு நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை. மேலும், சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால் அவரிடம் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 பல்லிகள், ஒரு ரக்கூன் குட்டியை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து திருச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்