Rock Fort Times
Online News

தமிழகத்தில் வேகமாக பரவும் காய்ச்சல்: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை வேண்டுகோள்…!

‘தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு, 70 சதவீதத்துக்கு மேல் ‘இன்ப்ளூயன்ஸா’ வகை பாதிப்பு இருப்பதால், மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், மழை உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள காய்ச்சல் பாதிப்புகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள், காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஏற்படுகிறது. சிலருக்கு காய்ச்சல் குறைந்தாலும், சளி, இருமல் ஆகியவை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இது மக்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல், இன்ப்ளூயன்ஸா வகை பாதிப்பு தான். எனவே, பெரிதாக பயப்பட வேண்டாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில், ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் வைரஸ் பரவ உகந்த காலநிலை நிலவுகிறது. இதனால், வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இருமல், காய்ச்சல், தலைவலி, சளி, உடல்வலி, உடல் சோர்வு ஆகியவை வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள். தற்போது, மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில், 70 சதவீதம் பேருக்கு ‘இன்ப்ளூயன்ஸா’ வகை பாதிப்பு தான் உள்ளது.இதுதவிர, டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலாலும், வேறு வகை சாதாரண காய்ச்சலாலும், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்ப்ளூயன்ஸா வகை காய்ச்சலாக இருந்தாலும், சுயமாக மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது. டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவரை மக்கள் அச்சப்படும் வகையில், காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்வது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்