மாநிலங்களவை தேர்தல்: திமுக, காங்கிரஸ், தேமுதிக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்:* போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு!
மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக, காங்கிரஸ், தேமுதிக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நாடு முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின்றன. அவற்றில் தமிழ்நாட்டில் 6 எம்பி பதவிகள் காலியாகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியாகும் இடங்களில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (மார்ச் 5) கடைசி நாளாகும். மாநிலங்களவை தேர்தலில் 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த வகையில் திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. திமுகவிடம் உள்ள 4 மாநிலங்களவை இடங்களில் திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்று தேமுதிகவிற்கும், மற்றொன்று காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திமுகவை சேர்ந்த திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகிய இருவரும் இன்று(மார்ச் 5) முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளருமான சாந்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி துரை வைகோ, மா.கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ்
மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தமிழ்நாடு மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

தேமுதிக
மாநிலங்களவை தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் , முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பிறகு மார்ச் 6ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 9ம் தேதி வரை வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாளும் கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிருந்தால் மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும். ஆனால் 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளதால் அனைவரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு செல்லவே வாய்ப்புள்ளது.

Comments are closed.