தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிகிறது. இந்த 6 எம்.பி.க்கள் காலியிடங்களை நிரப்ப தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி தொடங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 எம்.பி.க்களையும், அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். தி.மு.க. தங்களுடைய கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தே.மு.தி.க.வுக்கு தலா ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. தி.மு.க. தன்னிடம் உள்ள 2 எம்.பி.க்கள் இடங்களுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி, திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் காங்கிரஸ் வேட்பாளராக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் சுதீஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இன்று(மார்ச் 5) வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதைபோல காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங். தலைவர் செல்வப்பெருந்தகை. காங். தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேமுதிக வேட்பாளரான எல்.கே.சுதீஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

Comments are closed.