ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் ரிலீசான திருச்சி தியேட்டர்களில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை: ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு…!
ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் இன்று(10-10-2024) தமிழ்நாடு மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆயின. திருச்சியில் எல்.ஏ.சினிமாஸ், ஊர்வசி உள்ளிட்ட பல்வேறு தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இன்று மட்டும் சிறப்பு காட்சி உட்பட ஐந்து காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. இதனால் காலை 7 மணி முதலே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்கு முன்பு குவிந்து பட்டாசு வெடித்து ரஜினியின் போஸ்டருக்கு மலர் தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் எல்.ஏ. சினிமாஸ், ரம்பா தியேட்டர்களில் திருச்சி மாநகர வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவியுடன் சைக்கிள் ஸ்டாண்ட், கேண்டீன் என பல்வேறு இடங்களில் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். இந்த திடீர் சோதனை குறித்து கேட்டதற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் காணப்படுவதால் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு இந்த வெடிகுண்டு சோதனை மேற்கொண்டதாக தெரிவித்தனர். இந்த வெடிகுண்டு சோதனையால் ரசிகர்களிடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed.