Rock Fort Times
Online News

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜ மாதா ராணி ரமாதேவி உடல் நலக்குறைவால் மரணம்!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் அவர்களின் சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவியும், ராஜகோபால் தொண்டைமான், விஜயகுமார் தொண்டைமான் ஆகியோரின் தாயாருமான ராஜமாதா ராணி ரமா தேவி உடல்நலகுறைவால் இன்று மரணம்அடைந்தார். நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டிஷார் ஆட்சிகாலத்தில் பல சமஸ்தானங்கள், பாளையங்கள், ஜமீன்கள், மன்னர்கள்  என அவற்றை அரசாண்டு வந்தார்கள். நாடு முழுவதும் இது போன்ற சமஸ்தானங்கள் அதிகமாக இருந்தன. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு பிரபலமான சமஸ்தானமாக இருந்தது புதுக்கோட்டை சமஸ்தானமாகும். தொண்டைமான் மன்னர்கள் பரம்பரையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான் ஆவார். இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த சமஸ்தானங்கள் அனைத்தையும் இந்திய அரசுடன் இணைக்கும் பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஈடுபட்டார். அப்படி சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட போது அவற்றில் ஆட்சி செலுத்தி வந்த ராஜாக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. அப்படி இணைக்கப்பட்ட சமஸ்தானங்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை சமஸ்தானம். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜ மாதாவும் தற்போதைய மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் தாயாருமாகிய ராணி ரமாதேவி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. உடல் நலக்குறைவால் அவர் மரணமடைந்ததாக மன்னர் குடும்பம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதி காரியங்கள் எங்கு நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை . ராஜ மாதா ராணி ரமாதேவியின் மகன் ராஜா ராஜகோபால தொண்டைமான் பிரபல துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். அகில இந்திய அளவில் இவர் பல பதக்கங்களை பெற்றுள்ளார். இவரது மனைவி ராணி சாருபாலா தொண்டைமான் திருச்சி மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தவர். இரண்டு முறை தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகள் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றி மாநகர மக்களின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னா் குடும்பத்தை சோ்ந்த வி.ஆா்.காா்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2012ம் ஆண்டு நடந்த இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் சட்டமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டவா். புதுக்கோட்டை நகராட்சி தலைவராகவும் பதவி வகித்தவா். இவர்கள் திருச்சியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனையில் வசித்து வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ராஜா ராஜ கோபால தொண்டைமானின் அரண்மனை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்