திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள்: ஆணையர் மதுபாலன் ஆய்வு…!
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. பருவ மழையை எதிர்கொள்ள திருச்சி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 5 மண்டங்களிலும் மழைநீரை வெளியேற்றவதற்காக 20 ஹெச்பி ஆயில் என்ஜின் மின் மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் கழிவு நீர் அகற்றுவதற்கான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், 12 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதை கண்டறியப்பட்டு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது. வெள்ள நிவாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கென மாநகராட்சிக்குள் 22 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கும் பணிக்கு மண்டலத்திற்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியில் உள்ள 159.615 கீ.மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். மழையின் காரணமாக மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் 83001 13000 மற்றும் 0431-3524200 ஆகிய எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.