காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யு மான ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவர் எம்.பி.பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.காவி, பி.எஸ்.நரசிம்மா, சஞ்சய்குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இன்று விசாரித்தது. ராகுல் தரப்பில் வக்கீல் அபிஷேக் சிங்வி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட்டது ஏன்?, ஒரு அவதூறு வழக்கில் தண்டிக்கப்படுவதால் இவரது உரிமை பாதிக்கப்படுவதை விட ஒட்டுமொத்த தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படாதா? என்று கேள்வி எழுப்பினர். அதிகபட்ச தண்டனையை அறிவிக்கும் போது கீழ் கோர்ட்டுகள் உரிய காரணங்கள், ஆதாரங்கள் சொல்ல வேண்டும். 100 பக்கங்களில் தீர்ப்பளித்த கோர்ட் அதற்கான காரணங்களை சொல்ல தவறிவிட்டது என்று கூறி ராகுல் மீதான 2 ஆண்டு சிறை தண்டனையை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர். இதன் மூலம் ராகுல்காந்தி நாடாளுமன்றத்திற்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.