Rock Fort Times
Online News

தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ராகுல்காந்தி, பிரியங்கா தமிழகம் வருகை…!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும், நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் இன்னொரு அணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண இருக்கின்றன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அந்தவகையில் அடுத்த மாதம் தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி எம்பி வருகை தர உள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக கீழ்கண்ட குழுக்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நிதிக்குழு கே.வீ. தங்கபாலு, வாகன வசதி ஏற்பாட்டுக்குழு சு. திருநாவுக்கரசர், வரவேற்புக்குழு எம். கிருஷ்ணசாமி, விளம்பரக்குழு கே.எஸ். அழகிரி, பிரச்சாரம் மற்றும் அணி திரட்டல் குழு சா. பீட்டர் அல்போன்ஸ் மாநாட்டு திடல் அமைப்பு, தங்குமிடம் ரூபி ஆர். மனோகரன் எம்.எல்.ஏ.மற்றும் உபசரிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளும் மகளிர் பேரணி சிறப்பாக நடத்திட எஸ்.ஜோதிமணி எம்.பி. சுதா ராமகிருஷ்ணன் எம்.பி.,கே.ராணி, முன்னாள் எம்.பி. ஹசீனா சையத், தாரகை கத்பர்ட், ராணி வெங்கடேசன் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்