ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு…
பஸ் கண்ணாடி உடைப்பு போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு....
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய ஆழ்குழாய் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆழ்குழாய் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் கைவிட்டனர். இந்நிலையில், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து அன்பில், ஜங்கம்மராஜபுரம், மங்கம்மாள்புரம், அரியூர், செங்கரையூர், கல்விக்குடி உட்பட 10 கிராமங்களை சேர்ந்த 500- க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் இன்று அன்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையில் அமர்ந்து , இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஏற்கனவே 7 ஆழ்குழாய் கிணறுகள் அமைந்துள்ளது. அன்பில் பகுதியில் மீண்டும் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு நாங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த லால்குடி ஆர்.டி.ஓ.சிவசுப்ரமணியன், டிஎஸ்பி அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் மீது பொதுமக்கள் கல் வீசினர். இதில், பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சிலரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் சம்பவ இடத்திற்கு , விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் கலவரம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.