Rock Fort Times
Online News

தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித் திட்டத்தில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டால் போராட்டம்- அமைச்சர் கே.என்.நேரு…!

தி.மு.க.முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்கவில்லை. ஆட்சிகளை மாற்றுவது, அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது. பீகாரை போல தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித்திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயன்றால், அதற்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும், துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். பீகாரில் பல லட்சக்கணக்கானவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன் நீக்கினார்கள்? அதிலிருந்து சில இலட்சக்கணக்கானோரை மீண்டும் ஏன் சேர்த்தார்கள்? என்பதற்குத் தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்கவில்லை. ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தலை நேர்மையோடு நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி. ஆனால், தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது. இறந்து விட்டதாகக் கருதப்பட்டவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், பல இடங்களில் பதிவு செய்தவர்கள், அல்லது காணப்படாதவர்கள் என தேர்தல் ஆணையம் நான்கு காரணங்களுக்காக வாக்காளர்களை நீக்கியிருந்தது. தேர்தல் ஆணையம், “வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு” நடத்தப்படும் என்று தெளிவாகக் கூறியிருந்த போதிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கு வரவே இல்லை என்று வாக்காளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். பீகாரில் கடைப்பிடிக்கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். கள ஆய்வு மேற்கொள்ளப்படாமலேயே நமது வாக்காளர்களை நீக்கவும், வெளி வாக்காளர்களைச் சேர்க்கவும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு எதிர்க்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்