Rock Fort Times
Online News

அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் “கெத்து” காட்டிய தனியார் பஸ் கண்டக்டருக்கு காப்பு…!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. ராம்ஜிநகர் வடக்கு பாகனூர் திருநகர் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவர் கண்டக்டராக பணியாற்றினார்.  நாச்சியார்கோவில் பஸ் ஸ்டாப்பில் பஸ் வந்த போது உறையூர் பகுதியைச் சேர்ந்த குண்டல் என்கிற ராம்குமார் ( 33)என்பவர் ஏறினார். அவரிடம் டிக்கெட் எடுக்குமாறு அரசு பஸ் கண்டக்டர் கேட்டார்.  அப்போது அவர், தான் அரசு போக்குவரத்து கழக ஊழியர் என கூறியதாக தெரிகிறது. உடனே கண்டக்டர் தாஸ் அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அடையாள அட்டையை அவர் காண்பிக்க  மறுத்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரசு பஸ் கண்டக்டரை தகாத வார்த்தையால் திட்டிவிட்டு கீழே இறங்கி ஒரு கல்லை எடுத்து அவரை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் தாஸ் ராம்குமாரை சக பயணிகள் உதவியுடன் பிடித்து உறையூர் போலீசில் ஒப்படைத்தார்.  அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் அதே  ரூட்டில் தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வருவது தெரியவந்தது. பின்னர் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்