தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இதற்காக இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், திருச்சியில் இருந்து தனது தேர்தல் சுற்றுப்பயணத்தையும் ஆரம்பித்துள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.அந்த வகையில் கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் நாளை ( செப்.27) கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். கரூரில் விஜய் பிரசாரம் செய்ய பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு தவெக சார்பில் போலீசில் மனு செய்யப்பட்டு இருந்தது. அதில் விஜய் பிரச்சாரம் செய்ய லைட் ஹவுஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் தேர்வு செய்து கூறியதாக தெரிகிறது. அதற்கு போலீசார் கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள்? எத்தனை வாகனங்கள் வரும்? என்பன உள்ளிட்ட விவரங்களை கூறினால் மட்டுமே அதற்கேற்றவாறு பிரசாரத்திற்கு அனுமதி வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், நாமக்கல்லில் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

Comments are closed.