Rock Fort Times
Online News

ஒருவழியாக தீர்ந்தது பிரச்சனை: மதுரையில் தவெக நடத்தும் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ‘களம்’ காண்கிறது. இந்நிலையில் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார். இதனையடுத்து போலீஸ் தரப்பில், மாநாடு நடைபெறும் 25-ந்தேதியை தொடர்ந்து 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியதிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு புஸ்சி ஆனந்த் தரப்பில், கட்சி தலைமையிடம் கேட்டு முடிவு செய்கிறோம் என கூறிவிட்டு சென்றனர். இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறிப்பிட்ட அந்த தேதியில் நடைபெறுமா? அல்லது தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று வருகிற 21-ம் தேதி மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த தேதிக்கு முன்பாகவே மாநாடு நடக்க இருப்பதால், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மாநாட்டுக்கான தேதி அறிவிப்பை பகிர்ந்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்