திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்
இடைத்தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வில் அறிவியல் கணினி +1 மாணவ-
மாணவியர்கள் 27 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 50 மதிப்பெண்ணிற்கான தேர்வில் ஒரு மாணவியை தவிர மற்ற 26 பேரும் குறைந்த மதிப்பெண்ணே எடுத்ததாக
கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேதியியல் ஆசிரியர் அனைவருக்கும் கேள்வித்தாளை வீட்டு பாடமாக பயின்று வர கூறினாராம். ஆனால் அதற்கும் பெரும்பாலான மாணவ-மாணவியர்கள் படித்து வரவில்லையாம். இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த அந்த ஆசிரியர் நேற்று காலை வகுப்பிற்கு வந்த 22 மாணவ- மாணவியர்களை பிரம்பால் தொடை, முதுகு, கால் பகுதிகளில் அடித்துள்ளார்.
இதில் மாணவர்கள், மாணவியர்களின் உடலில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மாலையில் வீடு திரும்பிய மாணவ-மாணவியர்கள் நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதில், 2 மாணவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது நல்லது தான், இருப்பினும் இவ்வாறு கண்மூடித்தனமாக காவல்நிலையத்தில் குற்றவாளியை தாக்கியது போன்ற காயங்கள் ஏற்படும் வகையில் தாக்கி இருப்பது வருந்தத்தக்கது. ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.