கடலுக்கு நடுவே ரூ.550 கோடியில் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி… * ரயில் போக்குவரத்து தொடங்கியது!
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கடலுக்கு நடுவே கட்டப்பட்ட பழைய ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து ரூ.550 கோடியில் புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று(06-04-2025) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். முன்னதாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அனுராதபுரத்திலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பகல் 12-30 மணியளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வந்தார். பின்னர், கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்துக்கு வந்து பகல் 12-45 மணியளவில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்ததுடன், புதிய `பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதோடு கப்பல் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது பாம்பன் பாலத்தில் அலங்கரிக்கப்பட்ட ரயில் சென்றது. சற்று நேரத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றும் பாலத்தின் வழியாக சென்றது. அப்போது கப்பலுக்கு வழி விடும் வகையில் பாலம் செங்குத்தாக தூக்கப்பட்டது. இதனைக் கண்டு கண்டு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி அடைந்தார். மேலும், வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான நான்கு வழிச் சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பிரதமர் மோடி ராமேஸ்வரம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். விழாவில் பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான பட்டு சட்டை, பட்டு வேட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வருகையை முன்னிட்டு ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Comments are closed.