திருச்சியில் மார்ச் 11ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஜி’ கார்னர் உட்பட 3 இடங்களை பார்வையிட்ட கட்சி நிர்வாகிகள்…!
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. மேலும், இந்த மெகா கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., ஐ.ஜே.கே.. புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23-ந்தேதி முதலாவது பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடுத்தகட்டமாக பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன்படி, மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். அப்போது, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மார்ச் 7-ந்தேதி வேலூரில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மதுரை மற்றும் வேலுார் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மார்ச் 11-ந்தேதி பிரதமர் மோடி திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதில், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஒருங்கிணைக்க பா.ஜ.க. சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சியை அடுத்த மாத்தூர் சுற்றுச் சாலை பகுதி, திருச்சி, பஞ்சப்பூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள காலிமனை மற்றும் ஜி கார்னர் ரெயில்வே மைதானம் ஆகிய 3 இடங்கள் தேர்வாகியுள்ளது. இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், மூன்று இடங்களையும் பார்வையிட்டு மேலிடத்துக்கு தெரிவித்துள்ளோம். அனேகமாக ‘ஜி’ கார்னர் மைதானம் தேர்வு செய்யப்படலாம். நாளை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி வருகிறார். அதன் பின்னர் இடம் தேர்வு தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் எந்த இடம் என்பது இறுதி செய்யப்படும் என்றனர்.

Comments are closed.