தமிழகத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம்: திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 26) தமிழகம் வருகிறார். கேரளாவில் இருந்து நாளை இரவு 7.50 மணிக்கு பிரதமர் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.35 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர், அரசினர் விடுதியில் தங்கி ஓய்வு எடுக்கிறார். 27 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் அரியலூரில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ‘ரோடு ஷோ’வில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். அதனைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். மதியம் சுமார் 1.30 மணியளவில் கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி வருகிறார். அங்கிருந்து 2.30 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். இந்தநிலையில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப்படையான எஸ்பிஜி அதிகாரிகள் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் ஆகியோர் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு தகுந்த ஆலோசனை கூறினர். பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments are closed.