தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் தொடங்கியுள்ளன. அந்தவகையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த 22ம் தேதி சந்தித்துப் பேசினார். 30 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கே.சி. வேணுகோபால் வழங்கியதாகவும், கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க சிரமம் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி, மார்ச் மாதம் 5ம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கி வைப்பதற்காக அவர் தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. ராகுல்காந்தியின் வருகையை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். இதேபோல, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஸ் கோயல் என அடுத்தடுத்து தமிழகத்திற்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவுள்ள நிலையில், மார்ச் 5ம் தேதி ராகுல்காந்தியும் தமிழகம் வருகை தர உள்ளதால் தமிழக அரசியல் களம் மீண்டும் மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Comments are closed.