நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இரண்டு முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆக்க பாரதிய ஜனதா கட்சி வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்து வருகிறது. மறுபுறம் இந்த முறை எப்படியாவது மோடியை வீழ்த்தி விட வேண்டும் என்று இந்தியா என்ற பெயரில் மாபெரும் கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளன. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் எப்படியாவது பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என அண்ணாமலை தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அண்ணாமலை நடத்திய “என் மண் என் மக்கள்” என்ற யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவு பெற்றது. அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து சென்னையில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொண்டு பேசினார். இந்தநிலையில், பிரதமர் மோடி தென்னிந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, வருகிற 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி,
வருகிற 15ம் தேதி சேலத்திற்கும், 16ம் தேதி கன்னியாகுமரிக்கும், 18ம் தேதி கோவைக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பாண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.