2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று (ஜூலை 26) தமிழகம் வந்தார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, ரெயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட்டுள்ள ரூ.2, 571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழா முடிந்த பிறகு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். இரவு 10.15 மணி அளவில் திருச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு கார் மூலம் சென்று திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்றுகாலை தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மீண்டும் சாலை மார்க்கமாக ,பிரதமர் மோடி ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்தார்.திருச்சி கண்டோன்மெண்ட், ஒத்தக்கடை, டி.வி.எஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், கொட்டப்பட்டு வழியாக சென்று சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு விமான நிலையத்திற்கு சென்றார். செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் பிரதமர் மோடிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரித்தவாறு மக்களை பார்த்து கையசைத்துக் கொண்டே பிரதமர் மோடி விவான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் சென்றார். கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று (ஜூலை 27) நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.விழாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 2 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்களை சந்தித்தார்.பிரதமர் மோடி வருகையையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், பொன்னேரி முதல் கோயில் வரையிலான நெடுஞ்சாலை, விழா அரங்கம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Comments are closed.