Rock Fort Times
Online News

இந்தியா மீதான 25% வரி ரத்து..!* கையெழுத்திட்டு உறுதி செய்தார் அதிபர் டிரம்ப்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 7, 2026) ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு, இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவிகித அபராத வரியை முழுமையாக ரத்து செய்தார். ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக ஆகஸ்ட் 2025இல் டிரம்ப் விதித்த இந்த கூடுதல் வரி இப்போது நீக்கப்பட்டுள்ளது. இது இந்தியா – அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் (Interim Trade Agreement) பகுதியாகும். முன்னதாக, டிரம்ப் ரஷியாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை கண்டித்து முதலில் 25% வரி, பின்னர் கூடுதல் 25% அபராத வரி விதித்திருந்தார். கடந்த திங்கள்கிழமை (பிப். 2) அவர் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாகவும், அபராத வரியை 18% ஆக குறைப்பதாகவும் அறிவித்தார். இப்போது அபராத வரி 25% முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இதனை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தனது க்ஸ் பக்கத்தில் வரவேற்று பதிவிட்டுள்ளார். “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா – அமெரிக்கா இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் அளவுக்கு சந்தை வாய்ப்பை திறக்கும். ஏற்றுமதி அதிகரிப்பால் பெண்கள், இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்கள், அரிசி, கோதுமை, மக்காச்சோளம், பால் பொருட்கள், ஜவுளி ஆடைகள், தோல் பொருட்கள், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், விமான உதிரிப்பாகங்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றுக்கான வரிகள் நீக்கப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தால் இந்திய ஏற்றுமதி துறைகளான ஜவுளி, தோல், ரசாயனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை பெரும் பயனடைக்கும். இது இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும். இந்திய ஏற்றுமதிஅதிகரிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சுயசார்பு இந்தியாவுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக உலகில் இது முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்