Rock Fort Times
Online News

ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந்தேதி சபரிமலை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தநிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்தி வைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி, ஜனாதிபதி திரவுபதி முர்பு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்கிறார். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜையின் இறுதி நாளான 22-ந்தேதியே ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 22-ந்தேதி இரவே சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 24-ந்தேதி வரை கேரளாவில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி வருகை தரும் 22-ந்தேதி பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது. ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்