விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து திடீரென விலகிக் கொண்டுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். நேற்று (ஜூலை 4) நடைபெற்ற த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என்றும், கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில் தேர்தல் பிரசார உத்திகளை வகுக்கும் நிபுணரான பிரசாந்த் கிஷோர், விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். விஜயை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து பேசிய அவர், ‘விஜய் தமிழகத்தின் புதிய நம்பிக்கை’ என்றும் கூறினார்.அதன்படி பிரசாந்த் கிஷோரின் சிம்ப்பிள் சென்ஸ் அனல்ட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் பணியாளர்கள், த.வெ.க., உடன் இணைந்து தேர்தல் உத்திகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விஜய் கட்சிக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்து பிரசாந்த் கிஷோர் திடீரென விலகி உள்ளார். பீகார் மாநில தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுவதால், அவரது கவனம் முழுவதும் அங்கு தான் இருக்கிறது. அது மட்டுமின்றி, தமிழகத்தில் விஜய் எடுத்த கூட்டணி தொடர்பான நிலைப்பாடுகளில், பிரசாந்த் கிஷோர் தரப்பினருக்கு உடன்பாடு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக, விஜய் கட்சிக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்து பிரசாந்த் கிஷோர் வெளியேறி விட்டார். அவரது சார்பில் தமிழகத்தில் விஜய் கட்சிக்காக பணியாற்றிய 30 பேரும், சமீபத்தில் விலகிக்கொண்டு விட்டனர். அவர்களில் ஒரு சிலர், நேரடியாக ஆதவ் அர்ஜூனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.நான் பீகார் தேர்தல் பணியில் மும்முரமாக இருக்கிறேன். விஜய்க்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபடலாமா, வேண்டாமா என்று நவம்பர் மாதத்துக்கு பிறகே முடிவு செய்வேன்’ என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.