திருச்சியில் இயங்கி வந்த பிரபல பிரணவ் ஜூவல்லாிக்கு திருச்சி மட்டுமின்றி நாகர்கோவில், மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை ஆகிய ஊர்களில் கிளைகள் உள்ளன. இதன் விளம்பர துாதுவா்களாக நடிகா் பிரகாஷ்ராஜ், நடிகைகள் ராதிகா மற்றும் சைத்திரா ரெட்டி ஆகியோா் உள்ளனா். இங்கு நகை வாங்கினால் செய்கூலி, சேதாரம் இல்லை என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. நகை சிறுசேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களுக்கும் பல்வேறு சலுகைகள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டன. இதனை நம்பிய பொதுமக்கள், வணிகர்கள், அலுவலர்கள் என்று ஆயிரக்கணக்கானவா்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அந்த வகையில் ரூ.100 கோடி வரை வசூல் ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் பிரணவ் ஜூவல்லரி முதலீடு செய்த தொகைக்கான முதிர்வு முடிந்த உடன் அந்த நகைக்கடைக்கு சென்ற முதலீட்டாளர்கள் தாங்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்டபோது திருப்பித்தராமல் இழுத்தடித்து மோசடி செய்தனர். ஒரு கட்டத்தில் அந்த கடையின் வாடிக்கையாளர்கள் பலர் திருச்சி, மதுரை உள்ளிட்ட கடைகளை முற்றுகையிட்டனர். போலீசாரின் ஆலோசனையின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த கடையின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரணவ் ஜுவல்லரி மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பிரணவ் ஜுவல்லரி 47 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததும் தொடர்ந்து 11 கிளைகளில் பெரும்பாலான இடங்களில் போலி நகைகள் மற்றும் கவரிங் நகைகளை வைத்து மக்களிடம் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஜுவல்லரி உரிமையாளர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் பிரணவ் ஜூவல்லரியில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களிடமிருந்து புகார்கள் பெற தனியாக புகார் மேளா ஒன்றை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சூழலில் தலைமறைவான இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லலாம் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி கலைச்செல்வன் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.