Rock Fort Times
Online News

கரூரில் விஜய் பேசியபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை:- வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம்!

கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், முறையாக பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை, குறுகிய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, குறைந்த போலீசாரே பாதுகாப்பு பணியில் இருந்தனர். விஜய், தாமதமாக பிரசார இடத்துக்கு வந்தார் என கரூர் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, 3 நாட்களுக்கு பின் மவுனம் கலைத்த விஜய், கரூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விரைவில் உண்மை வெளிவரும் என வீடியோவில் கூறி இருந்தார். இந்நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்தது எப்படி? என்பது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் வீடியோ ஆதாரத்துடன் கூறியதாவது; போலீசார் இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க முடியாது என விஜய்யே கூறியுள்ளார். தவெகவினர் அனுமதி கோரியபோது 10 ஆயிரம் பேர் வருவார்கள் என கூறப்பட்டது. ஆனால் 27 ஆயிரம் பேர் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். கட்சித்தலைவர் வரும்போது வந்த கூட்டமும், ஏற்கெனவே இருந்த கூட்டமும் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. விஜய் பிரசார வாகனத்துக்கு வழிவிடும்போது நெரிசல் ஏற்பட்டது. பிரசாரத்தில் விஜய் பேசியபோது மின்சாரம் நிறுத்தப்படவில்லை. ஜெனரேட்டர் ரூமுக்குள் அதிகம் பேர் புகுந்ததால் அங்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பிரசார வாகனத்தை முன்பே நிறுத்தும்படி அறிவுரை கூறப்பட்டது. ஆனால் அதனை தவெகவினர் ஏற்கவில்லை. மக்கள் காலையில் இருந்தே காத்திருந்ததால் சோர்வடைந்துள்ளனர். தண்ணீர் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்