Rock Fort Times
Online News

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஆக.9ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்…!

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் பெளர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இதன்படி விழுப்புரத்திலிருந்து ஆக. 9-ம் தேதி காலை 9.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். அதேநாளில் பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர். திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும், இந்த இரு ரயில்களும் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்