Rock Fort Times
Online News

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு..- * நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தகவல்!

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையை தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா இன்று (10-04-2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு பகுதிகளையும், அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன்பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முன்கூட்டியே ஆய்வுப் பணிகளை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நல்ல நிலையில் உள்ளது. மேட்டூர் அணையில் கூடுதல் பணிகள் கேட்டுள்ளனர். அந்தப் பணிகள் வழங்கப்படும். தற்போது ரூ.20 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மாதங்கள் மட்டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, இரண்டு மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும். மீண்டும் பாசன காலம் முடிந்த பிறகு பணிகள் துவக்கப்படும்” என்றார். ஆய்வின்போது திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாள குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்