ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியது தனது மனதில் இருந்த பாரத்தை குறைத்துள்ளதாக ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.அரசியல் வேறு, மனிதாபிமானம் வேறு என்பதை அரசியல் நமக்கு காலம் காலமாக கற்றுக் கொடுத்துக் கொண்டு வருவதாக கூறியிருக்கிறார்.
”மரியாதைக்குரிய ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய தாயார் மறைவிற்கு நேரில் சென்று விசாரித்தேன். பழனி மலை குடமுழுக்கு அன்று முருகனுக்கு மாலை அணிந்து கொண்டேன். மண்டலாபிஷேகத்தின் 48வது நாளான 16 அன்று விரதத்தை முடித்துக் கொண்டேன். விரதத்தை முடித்தவுடன் அவரை சந்தித்தது மனதின் பாரத்தை குறைத்தது.”
பார்க்க செல்வதற்கு முன் செண்பகப் பூவை வாங்கிக் கொண்டேன். அதில் கொஞ்சம் எடுத்து என் வீட்டில் இதய தெய்வம் அம்மாவிற்கு சூட்டினேன்.
”நானும் எனது மனைவியும் சென்றோம். அவரை சந்தித்தோம். அப்போது அவரின் உதவியாளர் சந்தோஷ் அவர்களிடம் கொடுத்து செண்பகப் பூவை விஜயலட்சுமி அம்மா அவர்கள் படத்திற்கும், அம்மா படத்திற்கும் பிரித்து போட்டு விடுங்கள் என்றேன். அவர் சிறிது நேரத்தில் நாங்கள் அமர்ந்திருந்த அறையில் உள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு செண்பக பூவில் பாதியை போட்டார். ”
‘நான் சொன்னது அவருடைய அம்மா ஆனால் அவர் சூட்டியது நம் இதய தெய்வம் அம்மாவிற்கு. இதைக் கண்ட என் மனைவி சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது என்றார். ஆறுதல் சொல்ல எனக்கு வயது போதவில்லை என்றாலும் தைரியம் சொல்லிவிட்டு வந்தேன். கழக நிர்வாகிகள் பலர் அவரிடம் துக்கம் விசாரித்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அரசியல் வேறு, மனிதாபிமானம் வேறு என்பதை அரசியல் நமக்கு காலம் காலமாக கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறது. அரசியல் சில நேரம் மணக்கத்தான் செய்கிறது.”