தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற கெடுபிடி காரணமாக, அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்தது. பதவி விலக முன்வந்துள்ள இருவரும், தங்களின் ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்தநிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்து வந்த வனம் மற்றும் காதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு கவர்னர் மாளிகையில் அவர் பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.