தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் தேர்தலை எவ்வாறு சந்திக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அச்சு ஊடகங்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் காலகட்டங்களில் அதுதொடர்பான விளம்பரங்களை வெளியிடலாம். ஆனால், அதற்கான முன்அனுமதியை மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (எம்.சி.எம்.சி.) முன்சான்றளிப்பு பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றளிப்பை பெறாமல், எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, அமைப்போ அல்லது நபரோ வாக்குப்பதிவு நாளன்றும் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளன்றும் அச்சு ஊடகங்களில் எந்த விளம்பரத்தையும் வெளியிட முடியாது. தனிநபர்கள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள், விளம்பரங்களுக்கான சான்றளிப்பிற்கு மாவட்ட எம்.சி.எம்.சி. குழுவிடம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைத் தலைமையிடமாகக் கொண்ட அனைத்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், விளம்பரங்களுக்கான சான்றளிப்பிற்கு மாநில அளவிலான எம்.சி.எம்.சி. குழுவிடம் விண்ணப்பிக்கலாம். அச்சு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு முன் சான்றளிப்பு அனுமதி கோரும் விண்ணப்பதாரர்கள்விளம்பரம் வெளியிட திட்டமிடப்பட்ட தேதிக்கு குறைந்தது 2 நாட்களுக்கு முன்னதாக எம்.சி.எம்.சி. குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதுபோன்ற விளம்பரங்களை ஆய்வு செய்து முன்சான்றளிக்கத் தயார் நிலையில் குழுக்கள் உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.