தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முதல்முறையாக த.வெ.க. சந்திக்கிறது. இதற்காக அந்த கட்சியின் தலைவர் விஜய் ‘மக்கள் சந்திப்பு’ என்கிற பெயரில் பொதுமக்களை சந்தித்து சிறப்புரையாற்றி வருகிறார். அதேபோல புதுச்சேரி மாநிலத்திலும் தங்களது கட்சியை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக புதுச்சேரியில் வருகிற 5-ந்தேதி த.வெ.க. சார்பில் விஜய் பங்கேற்கும் ‘ரோடு ஷோ’ காலாப்பட்டு முதல் கன்னியக்கோவில் வரை நடத்த அனுமதி கேட்டு கட்சி நிர்வாகிகள் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த 26-ந் தேதி கடிதம் கொடுத்தனர். ஆனால், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும்பட்சத்தில் இதுவரை போலீஸ் அனுமதி வழங்காததால் த.வெ.க.வினர் என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே புதுவை போலீஸ் ஐ.ஜி.அஜித்குமார் சிங்லாவை அவரது அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சந்தித்து, விஜய்யின் மக்கள் சந்திப்புக்கு அனுமதி தொடர்பாக பேசினார். ஆனால் ரோடு ஷோ நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புஸ்சி ஆனந்த் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் வரை நடந்தது. தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணனையும் சந்தித்து பேசினார். இதற்கிடையே புதுவை உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் கூட்டம் நடத்துவது தொடர்பாக புஸ்சி ஆனந்திடம் போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்படும். கரூர் துயர சம்பவத்தை காரணம் காட்டி ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, புதுவை சபாநாயகர் செல்வம் கூறியதாவது புதுச்சேரி சிறிய நகரம். தமிழகத்தை போன்று மிகப்பெரிய சாலைகள் இல்லை. ஆகவே, விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லது. வேண்டுமென்றால் தனியாக மைதானம் போன்ற இடத்தில் கூட்டம் நடத்தி கொள்ளலாம்’ என்று கூறினார்.

Comments are closed.