மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்த 11 வாலிபா்களை துாக்கியது திருச்சி காவல்துறை….
ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை...
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் சாகசம் (வீலிங்) செய்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் இவ்வாறு சாகசம் செய்தபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. அப்போது அவர் பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சாகசத்தில் ஈடுபட்ட டிடிஎஃப் வாசனின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் சிலர் சாகசத்தில் ஈடுபடுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் 94874 64651 என்ற உதவி எண்ணுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் ஐபிஎஸ் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படை போலீசார் மற்றும் அந்தந்த காவல்நிலைய போலீசாா் அதிரடி வேட்டையில் இறங்கினா். அப்போது திருச்சி சரகத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சாகசத்தில் ஈடுபட்ட 11 வாலிபா்களை போலீசாா் பிடித்து கைது செய்தனா். அவர்கள் பயன்படுத்திய 6 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜீயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் அருகே இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட பர்ஷத்அலி ( 21), காணக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சங்குறிச்சி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த அஜித் (21) அஜய் (20), சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமருதூர் மேம்பாலத்தில் சாகசம் செய்த தஞ்சையைச் சேர்ந்த அஜய் (24) , மணிகண்டன், திருச்சியை சேர்ந்த சக்திவேல்( 20) , விஜய் (18), லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்த அருள்முருகன்( 24), கிரித்திஸ் (20), வசந்தகுமார்( 20), தேசிங்க பெருமாள் (18) ஆகிய 11 போ் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்து அவா்களை கைது செய்தனா். அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை கண்காணிக்க சமூக வலைத்தள கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் குறித்து மேற்கண்ட செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் ஐபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.