Rock Fort Times
Online News

திருச்சியில் பிளஸ்-1 மாணவி மர்ம மரணம்: நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா?…

திருச்சி- தஞ்சை ரோடு அரியமங்கலத்தில் உள்ள  கீழ  அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் ஜான் ஜூடி மைல்ஸ். ரயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்லின்(15). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.  ஜான் ஸ்டெபி ஜாக்குலினுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது ரொம்ப பிடிக்குமாம். இதனால், அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், வழக்கம்போல ஆன்லைனில் வாங்கிய நூடுல்ஸ் பாக்கெட்டில் இரவு நூடுல்ஸ் செய்து அவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் சாப்பிட்டு விட்டு நேற்று இரவு தூங்க சென்றனர்.  ஆனால், இன்று(02-09-2024) காலை ஜான் ஸ்டெபி ஜாக்லின் நீண்ட நேரமாக எழுந்திருக்க வில்லை. அவரது அறைக்கு சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார்.  இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டு அவரது இறுதி சடங்குகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜான் ஸ்டெபி ஜாக்லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றபோது மாணவியின் உறவினர்கள், எங்கள் பிள்ளை இறந்து போய் விட்டார். அந்த வருத்தத்தில் நாங்கள் உள்ளோம். எதற்காக நீங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்ய விரும்புகிறீர்கள், எங்களை நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார், தங்களுக்கு புகார் வந்துள்ளது அதன் அடிப்படையில் எங்கள் கடமையை செய்கிறோம்.  நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும் என கூறி அங்கிருந்து உடலை எடுத்துச் சென்றனர்.  நூடுல்ஸ் சாப்பிட்டதால் தான் மாணவி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  எது எப்படி இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மாணவி இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்