தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியப்பம்பாளையத்தில் இன்று (பிப்.15) நடந்த பிரச்சார கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மகளிர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரச்சார வாகனத்தில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பாஜக கட்சிக்கு அதிமுக அடிமை என ஸ்டாலின் பேசி வருகிறார். நான் சொந்த காலில் நின்று படிப்படியாக கட்சியில் உயர் பதவிக்கு வந்துள்ளேன். அதிமுக ஆட்சியில் தவறை சுட்டிக்காட்ட முடியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தேன். ஆனால் ஸ்டாலின் அப்பா வழியில் முதலமைச்சாராகியுள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. திருமாவளவன், ஆட்சியில் பங்கு கேட்க ஆரம்பித்துவிட்டார். டாஸ்மாக் ஊழல் பணத்தில் வாக்காளர்களை வாங்க திமுக திட்டமிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 68 கலை அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்தோம். தற்போது திமுக ஆட்சியில் உயர்கல்வி பயிலுவோரின் சதவீதம் 52 இல் இருந்து 48 ஆக சரிந்துள்ளது. அரசு காலி பணியிடங்களை நிரப்பாததால் திமுக நிர்வாகம் சரியாக இயங்கவில்லை. வீட்டில் உள்ளவர்களை மட்டுமே ஸ்டாலின் கவனித்து வருகிறார். நாட்டு மக்களை பற்றி அவருக்கு அக்கறை இல்லை. குளறுபடியால் முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்தானது திமுக ஆட்சியில் மட்டும் தான். திமுக ஆட்சியில் குப்பை வரி, மின்சார வரி, குடிநீர் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி விட்டது. இரவில் ஆட்டம், பகலில் தூக்கம் இதுதான் திராவிட மாடல் ஆட்சி. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மோடிக்கு கருப்புக்கொடி, தற்போது வெள்ளைக்கொடி காட்டி இரட்டை வேடம் போடுகிறது. திமுக ஆட்சியில் டெண்டர்கள் மூலம் ஊழல் நடக்கிறது. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஊழல் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தாக வேண்டும். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு தெரிந்து மணல் திருட்டு நடக்கிறது. மணல் கொள்ளைக்கு உதவிய அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.